திருவாரூர், மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
’டெல்டா எனப் பெயர் சூட்டுவதை மறுபரிசீலனை செய்திட வேண்டும்’ - WHO
திருவாரூர்: 'டெல்டா' எனப் பெயர் சூட்டுவதை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அதில், "இந்தியா உள்பட உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்துகிற கரோனா வைரஸ் B1617 என்ற மரபணுவிலிருந்து மாற்றமடைந்து உருமாறிய கரோனாவாக உலகெங்கும் தாக்குகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவற்றில் B1617 என்னும் கரோனா மரபணுவில் மாற்றமடைந்து, E484Q, L452R எனப்படும் இரு வகையான கரோனா வைரஸ் இந்தியாவில் உருமாறியதாகவும் இதற்கு உலக சுகாதார அமைப்பு (WHO) 'டெல்டா' எனப் பெயர் சூட்டியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
கிரேக்க எழுத்துகளின் பெயர்களில் ஆல்பா, பீட்டா, காமா போன்ற ஒன்றான டெல்டா எனப் பெயர் சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது. 'டெல்டா' என்பது கிரேக்க எழுத்துகளில் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலும் டெல்டா என்றால் ஆற்றுப்படுகை அல்லது வேளாண்மைக்கு ஏற்ற சமதள வளமான விளை நிலப்பகுதியாகும்.
தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பகுதி மட்டுமின்றி, மனிதனுக்குத் தேவையான நோயற்ற உணவை உற்பத்தி செய்யும் உலக சிறப்புமிக்க பாசன கட்டமைப்புகளைக் கொண்ட காவிரி பாசனப் பகுதியைக் குறிக்கும். அவ்வாறான டெல்டாவின் நற்பெயரை, மனித உயிரை அழிக்கும் பேரழிவு வைரசுக்கு சூட்டுவது ஏற்புடையதாக இல்லை. டெல்டா பகுதிக்குக் களங்கம் கற்பிக்கும் உள்நோக்கம் கொண்டதாக அமைந்துவிடும்.
எனவே டெல்டா என்று பெயர் சூட்டுவதை மறுபரிசீலனை செய்து வேறு ஏதேனும் பேரழிவைக் குறித்திடும் வகையில் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். எனவே உலக சுகாதார அமைப்பு எனது வேண்டுகோளை ஏற்று உரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்த கடிதத்தை உலக சுகாதார அமைப்பின் இந்தியாவின் கிளை அலுவலகம் டெல்லி அலுவலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் அச்சுறுத்தும் சீனா: மனிதனுக்குப் பரவிய H10N3 பறவை காய்ச்சல்!