திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (நவ.30) திருவாரூர் மாவட்டம், உள்ளிக்கோட்டையில் தேர்தல் பரப்புரயில் ஈடுபட்ட உதய நிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏர்லைன்ஸ், ரயில்வேக்களை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பது போல் விவசாயத்தையும் கார்ப்ரேட்டுக்கு அடகு வைப்பதற்கான முயற்சியைத் தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கை உணர்ந்து செயல்படவேண்டும்.
மக்கள் ஆட்சி மாற்றத்தை தான் விரும்புகிறார்கள். மக்களவைத் தேர்தலின் போது இருந்த எழுச்சி தற்போதும் மக்களிடம் உள்ளது. அதிமுக ஆட்சியின் ஊழல்களில் குறிப்பாக துரைக்கண்ணு குறித்து பேசும் போது மக்கள் தன்னெழுச்சியாகவே 800 கோடி ரூபாய் என்று கூறுகிறார்கள். துரைகண்ணுவின் உடலை வைத்து ரூ. 800 கோடி வசூலித்த பிறகு உடலை ஒப்படைத்தார்களோ, அந்த நிகழ்வுகள் எல்லாம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
துரைக்கண்ணுவை வைத்து 800 கோடி வசூலித்த அதிமுக இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும். இந்தியை திணிக்க முடியாத காரணத்தால் சமஸ்கிருதத்தை கொண்டுவருவதற்கும், புதிய கல்விக்கொள்கை மூலம் குலக்கல்வி முறையை கொண்டு வருவதற்கும் முயற்சிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் இதற்கான பதிலடி கொடுப்பார்கள்"என்றார்.
இதையும் படிங்க:அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் - நிர்வாகி மீது எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு!