திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் திலகவதி தம்பதியினருக்குப் பால புகழேந்தி என்கிற மகனும், அனிதா என்கிற மகளும் உள்ளனர்.
கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் கடந்த 2011 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதனிடையே பால புகழேந்தி (வயது 28) பிஎஸ்சி முடித்துவிட்டு கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மெயின்டனன்ஸ் இன்சார்ஜ் ஆக கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பால புகழேந்தி தனது பத்து வயதிலிருந்து தனது தாய் திலகவதி ஊரான புளிச்சகாடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு எதிரில் உள்ள குளத்தில் மிதப்பதைப் பழக்கமாகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர் பணிபுரியும் கோயம்புத்தூரில் உள்ள நீச்சல் குளத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் வரை மிதக்கும் அளவிற்கு, வளர்ந்துள்ளது.
பால புகழேந்தி தற்போது 120 கிலோ எடை இருப்பதால், உருவக் கேலியால் தினம் தினம் பல்வேறு அவமானங்களைச் சந்தித்த வந்த காரணத்தினால், எதையாவது சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தனக்குப் பழக்கமான தண்ணீரில் மிதப்பதையே சாதனையாகச் செய்ய எண்ணி கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்துள்ளார்.
தண்ணீரில் 24 மணி நேரம் மிதப்பதற்கானச் சான்று வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தனது பிறந்த நாளான இன்று(டிச.24) பால புகழேந்தி புளிச்சகாடியில் உள்ள தான் சிறுவயதில் நீச்சல் பழகிய அதே குளத்தில் 24 மணி நேரம் மிதந்து அதனைக் காணொளியாகப் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனைக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்து இன்று காலை 10 மணிக்குக் குளத்தில் மிதக்கத் தொடங்கிய பால புகழேந்தி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொண்டு நாளை(டிச.25) காலை 12 மணி வரை 24 மணி நேரம் மிதக்க உள்ளார். இதனை அவர் காணொளியாகவும் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பால புகழேந்தி கூறுகையில், “உருவக் கேலியால் பாதிக்கப்பட்ட நான் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் எனக்குத் தெரிந்த விஷயமான தண்ணீரில் மிதப்பதை 24 மணி நேரம் செய்து சாதனை படைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன்” என்று கூறினார்.
இது குறித்து பால புகழேந்தியின் தாய் திலகவதி கூறுகையில், “எங்களுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் அவன் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிறுவயதிலிருந்து கூறி வருகிறான். அவன் கண்டிப்பாகச் சாதிப்பான். அவன் இவ்வாறு தண்ணீரில் மிதப்பது குறித்து எங்களுக்கு எந்த வித பயமும் இல்லை. கண்டிப்பாக அவன் சாதிப்பான்” என்று கூறினார்.
இதுகுறித்து சகோதரி அனிதா கூறுகையில், “சிறுவயதிலிருந்து அண்ணன் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு உள்ளார். கண்டிப்பாக உலக சாதனைப் படைப்பார். எங்களுக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால், அவர் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். கண்டிப்பாக இந்த சாதனையை அவர் செய்து முடிப்பார்” என்று கூறினார்.
இதையும் படிங்க:நாகூர் தர்கா கந்தூரி; ஆட்டோவில் எண்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!