திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், சிவசங்கரன் (35). திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள இனிப்பகத்தில் பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை நல்வழிப்படுத்த, அவரது மாமியார் சந்திரா மற்றும் நான்கு உறவுக்கார பெண்களுடன் கடந்த 19ஆம் தேதி புதன்கிழமை மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்று, அங்கு தங்கி மூன்று நாள்கள் சேவை செய்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர்.
அப்போது, மன்னார்குடி பேருந்திற்காக காத்திருக்கும்போது, மூன்று நாள்களாக குடியின்றி இருந்ததாலும், மாமிசம் இல்லாத உணவு என்பதாலும் சரியான உணவு சாப்பிடாத நிலையில், சரியான தூக்கமும் இன்றி இருந்த சிவசங்கரன், திடீரென ஆவேசமான நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து சாலையில் தப்பியோடி, பழைய பேருந்து நிலையத்தை தாண்டி ஏகாம்பரேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள சந்திற்குள் ஓடியுள்ளார். அங்கு திறந்திருந்த ஒரு கூரை வீட்டிற்குள் புகுந்த சிவசங்கரன், வீட்டில் இருந்தபடி இட்லி வணிகம் செய்யும் முத்து (55) என்பவரை அங்கிருந்த அரிவாள்மனை கொண்டு தோள்பட்டையில் வெட்டினார்.
தொடர்ந்து, கையில் அரிவாள்மனை வைத்துக்கொண்டு கோயிலின் பின்புறமாக கோயிலுக்குள் ஏறி கோயில் ராஜகோபுரத்தில் பதுங்கி கொண்டு தன்னை பிடிக்க வந்தால், தாக்குவேன் என மிரட்டி வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து கோயில் முன்பு, நூற்றுக்கணக்கானோர் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் திரண்டு விட்டனர். உடனடியாக அவரை பிடிக்க முயற்சிக்காமல், காவல் துறையினருக்குத் தகவல் தந்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தர, அவர்களும் வந்து கோபுரத்தின் மற்றொரு புறம் ஏறி அவரை பின்பக்கமாக வந்து லாவகமாக பிடித்தனர்.