தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்து 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம் - திருவாரூர் கனமழை

Tiruvarur Girl Death: திருவாரூரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில், 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

9 year child died on wall collapsed due to heavy rain in Thiruvarur
திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுமி உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:47 AM IST

திருவாரூர்: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை முதல், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.7) காலை 10 மணி முதல் மாலை வரை மிதமான மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. அதிலும் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் நேற்றிரவு 10 மணி வரை சுமார் 40 செ.மீ. மழையின் அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர். இவர் ஸ்ரீவாஞ்சியம் மின்சாரத்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மோகன்தாஸ்(11) என்ற மகனும் மோனிஷா(9) என்ற மகளும் உள்ளனர். அச்சிதமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மோகன்தாஸ் 6ஆம் வகுப்பும், மோனிஷா 4ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிகிறது.

நேற்று மோகன்தாஸ் மற்றும் மோனிஷா இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் போது, கனமழையின் காரணமாக திடீரென சுவர் இடிந்து இருவரின் மீதும் விழுந்துள்ளது. அதில் மோனிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக தந்தை ராஜசேகர் இருவரையும், இருசக்கர வாகனத்தில் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மோனிஷாவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடலை வைக்கப்படுள்ளது. இந்நிலையில், மோகன்தாஸ் சிறு காயங்களுடன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் சிறுமி உட்பட 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

ABOUT THE AUTHOR

...view details