திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கடகம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதிக்கு சாலை வசதி கிடையாது, இப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்றால் ஆற்றில் போடப்பட்டுள்ள தட்டிப்பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். முறையான பால வசதிகள்கூட இங்கு இல்லை.
ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தட்டிப்பாலத்தைத்தான் இப்பகுதி மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்திவருகின்றனர். தற்போது, இப்பாலமானது மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. சமீபத்தில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் பாலத்தின் மரச்சட்டங்கள், மூங்கில்கள் நீரில் நனைந்து சேதமாகியுள்ளன.
இதனால், பாலத்தை உபயோகிப்பதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள் பாலத்தைக் கடக்கும்போது மரண பயத்துடனே கடந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு அவசர நேரத்தில் செவிலியர், மருந்துகள் கொடுப்பதற்கு, இப்பாலத்தைக் கடக்க தயங்குவதாகத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துன்பத்தை அடைந்து வருகிறோம் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.