திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். இவரது மகன் துரைப்பாண்டியன் (22) இவர் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூரில் தங்கி, தனது அம்மாவுடன் கூலி வேலை செய்து வந்தார். இதில் அம்மாவும் மகனும் அஸ்தினாபுரம் அடுத்த கண்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வழிபாட்டுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக இருவரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்று தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதத்தில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு வரை பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதில் ஆராதனை முடிந்ததும் துரைப்பாண்டியன் தேவாலயத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியை பிடித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.