திருவண்ணாமலை செங்கம், தண்டராம்பட்டு மற்றும் கீழ்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த யாதவ குல மக்களுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான மடம் திருவண்ணாமலை திருஊடல் தெருவில் அமைந்துள்ளது. யாதவ குல சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்கள் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் வைத்து தலைவர் அறவாழி மற்றும் செயலாளர், பொருளாளர் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரும்பான்மையான நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களிடம் யாதவ குல சங்கத்தின் 2010 முதல் 2022 வரை பொறுப்பில் இருந்த பழைய நிர்வாகிகள் அதிகாரத்தை ஒப்படைக்காமல் மறுத்து வருவதாகவும், சங்கத்திற்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமண மண்டபத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்படுவதாகவும் தற்போது உள்ள தலைவர் அறவாழி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வழக்கறிஞர் சங்கர் என்பவரின் தூண்டுதலின் பேரில் பழைய நிர்வாகிகள் புதிய நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்காமல், பெரும்பான்மை உறுப்பினர்களுடன் தாங்கள் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து உள்ளதாக, போட்டி நிர்வாக குழு தான் உண்மையான குழு என்று கலகத்தை ஏற்படுத்தி வருவதாக அறவாழி தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, திருவண்ணாமலை திருவூடல் தெருவில் அமைந்துள்ள யாதவ சங்கத்தின் மடத்தின் உரிமையை தங்களுக்கு பதிவு செய்து தரக்கோரி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்து இட்டு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தீர்மானத்தை அளித்தனர்.