கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சிறு, குறு, பெரு வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், போக்குவரத்து என அனைத்தும் இயக்கப்பட தடை விதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் ஸ்தம்பித்தது.
தொடர்ந்து மே நான்காம் தேதி முதல், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுபானக் கடைகளை திறப்பதற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கும் விதமாக திருவண்ணாமலை நகரிலுள்ள பே கோபுரம் தெருவில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் சாலைகளில் ஒன்றுகூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
”144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் 45 நாட்களாக மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் வீட்டில் நிம்மதியாக கணவருடன் இருந்தோம், தற்போது மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதால் எங்கள் கணவன்மார்கள் மது அருந்தச் சென்று, சேமிப்புகள் அனைத்தையும் அங்கு கொடுத்துவிட்டால் எங்கள் குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.
இதனால் மன நிம்மதி கெட்டு, மன உளைச்சல் அதிகரிக்கக்கூடிய நிலைமை ஏற்படும். ஒவ்வொரு குடும்பமும் அழிவுப் பாதையை நோக்கி செல்லும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தங்களது அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, மதுபானக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் தீக்குளிப்போம்” என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தனி மனித இடைவெளி வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், சாலையில் பெண்கள் கூடி, மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க :ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் - அரசு அறிவுரை !