திருவண்ணாமலை மாவட்டம், நேதாஜி நகரைச் சேர்ந்த சுனிதா, கீழ் அணைக்கரையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி, சடையனோடை, களஸ்தாம்பாடி, சீலப்பந்தல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 8 மாதங்களுக்கு தீபாவளிச் சீட்டு நடத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தினை 120 நபர்களிடம் வசூல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, சீட்டு மாதங்கள் முடிந்த பின்பும் முதிர்வுத் தொகையை தராமல் இருவரும் அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்ப்பட்ட பெண்கள் பலமுறை சுனிதா, மணிகண்டன் ஆகியோரிடம் முறையிட்டும் தங்களது பணம் திரும்ப வரவில்லை.
மேலும் இவர்கள் இருவரும் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலிருந்த தங்களது அலுவலகத்தை இரவோடு இரவாக காலி செய்த நிலையில், இது குறித்து தற்போது அப்பகுதி காவல் நிலையத்தில் மக்கள் புகார் அளித்தனர்.
ஆனால், புகாரின் பேரில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தங்களது பணத்தினை மீட்டுத் தரக்கோரியும், மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு, மோசடி கும்பலிடமிருந்து பணத்தை பெற்றுத் தருவதாக காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.