திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூர் அருகில் கானமலை ஊராட்சி சீங்காடு கிராமத்தில் வசிப்பவர், ராமராஜ். இவரது மனைவி சுசீலா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சுசீலாவை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பயன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனையில் இருந்து சீங்காடு கிரமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.
சீங்காடு கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததால் பாதிரிபெருவள்ளி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுசீலாவின் உடலை டோலி மூலமாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைப்பாதையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமந்து சென்றனர்.
இதையும் படிங்க:108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியவர் கருணாநிதி - எ.வ.வேலு பெருமிதம்
இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கானமலை ஊராட்சி, எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடலும் எலந்தம்பட்டு கிராமத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் படவேடு அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு அவரது உறவினர்கள் டோலி மூலமாக சுமந்து கொண்டு சென்றனர்.