திருவண்ணாமலை: ஆரணி அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை நாட்களில் இந்த மாட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. அதை போல், இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தை களைகட்டியது.
இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி மற்றும் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யபட்டும் மாட்டு சந்தை அமோகமாக நடைபெற்றது.
மேலும், தேப்பனந்தல் மாட்டு சந்தையில் தற்போது வரையில் கைகளில் துண்டு போட்டு விலை பேசும் நிகழ்வு விவசாயிகள் - வியாபாரிகளிடையே நடைபெறுவதால் இந்த மாட்டுத் சந்தை தனிக் கவனம் பெற்று உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மாட்டு சந்தையில் விடியற்காலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிந்தனர்.