திருவண்ணாமலை: கீழ்ப்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் என்ற பெயரில் குடிசை அமைத்துக்கொண்டு தன்னை கடவுள் போல் பாவித்து அன்னபூரணி அரசி என்னும் பெண், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் காட்சி தரும் அபூர்வ நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அன்னபூரணி அரசை பார்க்க வருகின்றனர். அன்னபூரணி அரசு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒவ்வொரு அவதார ரூபங்களில் முழு மேக்கப்புடன் காட்சி தந்து, மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாக நம்பி பொதுமக்கள் அவரை காண வருகின்றனர்.
மேலும், யூ-ட்யூபில் பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி, 'ஆன்மீக தீட்சை' கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அன்னபூரணி அரசை தரிசித்து ஆசிர்வாதம் பெறும் மக்களுக்கு தீராத நோய், வாழ்வாதார பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை, தீய பழக்கங்களுக்கு அடிமை இப்படிப்பட்ட பல குறைகளில் இருந்து பக்தர்களைக் காத்து வாழ்வை ஆனந்தமாக வாழ வழி செய்தும் வருகிறாராம்.