திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காலை உணவுத் திட்டப் பயன்பாட்டிற்காக தரமற்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டடத்தின் தூண்களை கைகளால் உலுக்கியபோது, அதன் கான்கிரீட் துகள்கள் அனைத்தும் கீழே உதிர்ந்து விழுந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பள்ளி கட்டடம் கட்டியதில் ரூ.8 லட்சம் செலவினம் காட்டப்பட்டபோதும், கட்டடத்தின் தரம் கேள்விக்குறியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் (kaalai sitrundi thittam) தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதியதாக சமையல் கூடம் கட்டுவதற்காக, தேசிய ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான ஒப்பந்தத்தை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி எடுத்து, சமையல் கூடம் கட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கட்டடம் கட்டுமானப் பணியானது, தூண்கள் அமைக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (மே 14) அப்பகுதி இளைஞர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கைப்பந்து இந்த தூண்களின் மேல் பட்டு தூண்களின் மேலிருந்த சிமென்ட் துகள்கள் உடைந்து கீழே விழுந்ததாகத் தெரியவருகிறது.