திருவண்ணாமலை: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.
அரசு கலைக்கல்லூரி எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் தங்கும் விடுதியில் பயிலும் மாணவர்களுக்குள் ராகிங் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் அந்த அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் சீனியர் மாணவர்கள் செய்யச் சொன்ன பணியை ஜூனியர் மாணவர்கள் செய்யாததால், சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து சாட்டை, கயிறு மூலம் சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி உள்ளனர். அரசு மாணவர் விடுதியில் ராகிங் சண்டை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.