தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஷ் தாஸின் வழிகாட்டுதலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 960 கிராமங்களுக்கு தலா ஒரு கிராம விழிப்புணர்வு குழு (village Vigilance Committee-VVC) அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம விழிப்புணர்வு குழுவுக்கும் பொறுப்பு காவலர் (Village Vigilance Police Officer-VVPO) நியமிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு குழு காவலர் தலைமையில் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட கிராமம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்குழுவில் குறிப்பிட்ட கிராம விழிப்புணர்வு குழு காவலர், கிராம நிர்வாக அலுவலர், அந்த கிராம எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர், அந்த கிராமத்தின் முக்கிய நபர்கள் இணைக்கப்பட்டு தகவல்களை பறிமாறிக்கொண்டு வருகின்றனர்.
அது தவிர, இதர அரசுத்துறைகள் தொடர்பான தகவல்களும் காவல்துறை அலுவலர்கள் மூலம் குறிப்பிட்ட அரசுத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.