தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்குச் சென்று மது பாட்டில்களைத் திருட்டுத்தனமாக வாங்கிவந்து சிலர் விற்பனை செய்துவருகின்றனர்.
இதனைத் தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் ஆய்வாளர் தனலட்சுமி, உதவி ஆய்வாளர் முத்துக்குமாரசாமி, காவலர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 3) இரவு மலமஞ்சனூர் காளியம்மன் கோயில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து மினி வேன் ஒன்று வந்தது, வாகனத்தில் அன்னாச்சிப் பழம் இருந்ததைப் பார்த்த காவலர்கள் ஓட்டுநர் ஆனந்திடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்தார்.
சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தைச் சோதனை செய்தபோது 59 பெட்டிகளில் 2,832 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தனிடம் விசாரிக்கையில், அவர் தானிப்பாடி அருகே உள்ள டி. வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் எனத் தெரியவந்தது.
கரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டுள்ளதால் இந்த நேரத்தில் பெங்களூருவிலிருந்து தனக்குச் சொந்தமான மினிவேனில் குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கிவந்து தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்கலாம் என்று ஏற்றிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை வாகனத்தைப் பறிமுதல்செய்து தானிப்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டார்.