திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்து கீழ்கொடுங்கலூர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம்(மே 23) சுகநதி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்போது பணியிலிருந்த தலைமைக்காவலர் குமார் என்பவருடன் மற்றொரு காவலரும் சுகநதி ஆற்றிற்கு ரோந்து சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஆற்றிலிருந்து மணல் கடத்துவது உறுதி செய்யப்பட்டது.
இதனைக் கண்ட காவலர்கள் இருவரும் மணல் கடத்தலை தடுக்க சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கடத்தல் கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலைமை காவலர் குமாரின் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது.
தலைமைக்காவலர் தாக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு காவலர், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், படுகாயமடைந்த தலைமைக் காவலரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, தலைமைக் காவலரை வெட்டிச் சென்ற கும்பலை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வந்தவாசி காவல் துறையினர், தலைமை காவலரை தாக்கிய அடையாளம் தெரியாத கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.