திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கு சேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் சேவூர் பகுதியைச்சேர்ந்த மாணவர் ஒருவர், அப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவனை சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆங்கில ஆசிரியர் திலீப் குமார், இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் ஆகிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சொல்லியும் சாதிப்பாகுபாடு பார்த்தும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.
அரசுப்பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம்:பின்னர் அடிபட்ட மாணவன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவனை தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் குமார், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாணவனின் பெற்றோரிடம் நடந்தது என்னவென்று விசாரணை நடத்திப் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் முற்றுகையிட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.