திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆடு, உணவு சமைக்கும் பொருள்களுடன் வந்த திருநங்கைகள் சிலர், குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், சமூக நலத் துறை அலுவலர் கந்தன் ஆகியோர் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் அப்போது அவர்கள் கூறுகையில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறோம். எங்களுக்கு இந்த மாவட்டத்தில் மட்டும்தான் வீடு வழங்கப்படவில்லை.
மற்ற மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கும் வீடு வழங்க வேண்டும். அதேபோல் எங்களின் குறைகளைத் தீர்க்க குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தனர் .
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்