திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரம், கடலூரிலிருந்து 9, 10, 11, 12ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 10, 11ஆம் தேதி காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ரெயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.
பின்னர், திருவண்ணாமலையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இதே வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரத்திற்கு மதியம் மூன்று மணிக்கு சென்றடையும். விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 9, 10, 11ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலையிலிருந்து 10, 11, 12ஆம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரத்துக்கு அதிகாலை ஐந்து மணிக்கு சென்றடைகிறது. கடலூர் திருப்பாதிபுலியூர் ரயில் நிலையத்திலிருந்து 9, 10ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 11.08 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர், திருவண்ணாமலையிலிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு போளூர், ஆரணி சாலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை நள்ளிரவு ஒரு மணிக்கு சென்றடைகிறது. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 10, 11ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆரணி சாலை, போளூர் ரெயில் நிலையம் வழியாக திருவண்ணாமலைக்கு அதிகாலை 3.02 மணிக்கு வந்தடைகிறது.