திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த குயிலம் காட்டுப்பகுதியில், தலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதியினர் தானிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பிரம்மகுண்டம் பகுதியைச் சேர்ந்த மக்கட்டான் மகன் மூர்த்தி (45) என்பது தெரியவந்தது.
மேலும், மூர்த்தி அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தானிப்பாடி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
மோப்பநாய் கொண்டு தீவிர விசாரணை மேலும், இந்த இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மூர்த்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட பிரச்னையில் அடித்துக் கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படிங்க:தெலங்கானாவில் அதிர்ச்சி: பெண்ணுக்கு 139 பேர் பாலியல் வன்கொடுமை!