திருவண்ணாமலையில் உழவர் பேரவை சார்பில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும், வேலை செய்ததற்கான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தலையில் சாக்குத் துணியை போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தனியாருக்கு சொந்தமான தரணி சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன்பே தருவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை தனியார் சர்க்கரை ஆலை தங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டி பொங்கல் பானையில் மண்ணை போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வழங்கவேண்டிய வேலை, 40 நாட்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதிலும் 20 நாட்களுக்கு தரவேண்டிய கூலி தரப்படாமல் நிலுவையில் உள்ளதால் இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.