திருவண்ணாமலை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ஒரு திரைப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு மேலும், 2 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர். இவர்களது பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் திரண்டனர்.
அப்போது பொதுமக்கள் படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இதையறிந்த பவுன்சர்கள் பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை அழித்து அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது என்றும், மீறினால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் எனவும் அங்கிருந்த உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரியவருகிறது.
இவ்வாறு, பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத்தான் செய்வோம் எனவும் வேண்டுமெனில், உள் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி கொள்ளுங்கள் என இதற்கு பொதுமக்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலக நுழைவுப்பாதையில் கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் பவுன்சர்கள் இருந்தனர்.