திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் விலையில்லா கால்நடை வழங்கும் திட்டத்தில் கிராம அளவிலான குழு அமைத்தல் மேலும் பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கால்நடை துறை துணை இயக்குநர் பாரதி தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 56 கிராமங்களில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான விலையில்லா கறவை பசுக்கள், விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்வதற்கு ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த வார்டு உறுப்பினர், ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர், கிராம வறுமை ஒழிப்பு சங்க குழுவின் செயலாளர், கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் இணைந்து பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் கலந்துக் கொண்ட அலுவலர்கள் விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் பெறும் பயனாளிகள் பெண் பயணாளியாக இருக்க வேண்டும், நிலமற்ற ஏழைகளாக இருக்க வேண்டும், 16 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், கிராம ஊராட்சியில் நிரந்தரக் குடியிருப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும், சொந்தமாக கால்நடைகள் வைத்திருக்கக்கூடாது, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கை இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து ஏழு பேர் கொண்ட குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்யும் குழுவினர் இந்தப் பயிற்சி கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள், ஏழு பேர் கொண்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயனாளிகள் தேர்வு குறித்து காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசால் ஒன்பது ஆண்டுகளாக விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதையும் படிங்க:கடத்தப்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உதவியாளர் கர்ணன் மீட்பு!