திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்து உள்ள தேவனந்தல் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 64 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை என பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, '64 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் கழிவறை வசதி கூட இல்லை. முக்கியமாக கழிவறை பெண்களுக்கு மட்டுமே உள்ளது. ஆண்களுக்கு கழிவறை வசதி இல்லை. இதனால் அவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர்கள் செல்லும் இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதனால் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதையும் படிங்க:நாளை முதல் சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை:அமைச்சர் பெரியகருப்பன்
மேலும், குடிநீர் மேல்நிலை நீர்த் தொட்டியில் இருந்து சிமென்ட் பாகங்கள் உடைந்து விழுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை எனவும், பள்ளியில் இருந்த இரு கட்டடத்தில் ஒரு கட்டடம் ஏற்கனவே இடிக்கப்பட்டதாகவும், இதுவரை அந்த கட்டடத்தை கட்டித்தராமல் உள்ளதாகவும், இதனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே கட்டடத்தில் படித்து வருகிறோம் என்றும்; அதுமட்டுமில்லாமல், இருக்கும் ஒரு கட்டடமும் சரி இல்லாமல் இருக்கிறது’ என பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைக் கண்டித்து பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உரிய கட்டட வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:திருச்சியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 6251 பேர் மீது நடவடிக்கை; அதிரடி காட்டிய காவல் ஆணையர்!