திருவண்ணாமலையில்பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தேத்துறை கிராமத்தில் உள்ள வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது.
அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மனைவி ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் அனுமதித்தனர்.
இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அனக்காவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், உயிரிழந்தவர்கள் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அவருடைய மனைவி பிரியா மற்றும் இந்த தம்பதியினரின் மகள் திலக்ஷனா என்பது தெரிய வந்தது. இந்த மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.