திருவண்ணாமலை- பெங்களூரு புதிய பைபாஸ் சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற காரும், பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடி அருகே, திருவண்ணாமலை - பெங்களூரு புதிய பைபாஸ் சாலை அமைந்து உள்ளது.
இந்த பைபாஸ் சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காரும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்த யோகேஷ், மணிகண்டன் மற்றும் இவர்களுடன் சென்ற மேலும் ஒருவர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் உயிர் இழந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (செப்.2) இரவு முழுவதும் மழை பெய்து வந்ததால், காரில் பயணம் செய்தவர்கள் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த லாரி மீது மோதி இத்தகைய விபத்து ஏற்பட்டதா? இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து நடக்க நேரிட்டதா என பல்வேறு கோணங்களில் செங்கம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:விடுதி அறையில் மாணவர் தற்கொலை வழக்கு... பள்ளி தாளாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!