திருவண்ணாமலை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஆங்காங்கே விட்டு விட்டு தொடர் கன மழை பெய்து வந்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிரம்பி வந்தன. தற்போது மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் தொடர் கனமழை பெய்தது.
இந்நிலையில், ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 75 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன. ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆதனூர், விஜயநகரம் லாடவரம், சேவூர், களம்பூர், புதுப்பாளையம், ஒன்னுபுரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு ஓரிரு வாரங்கள் இருந்த நிலையில், நன்கு முற்றிய அனைத்து நெற்பயிர்களும் தொடர் கன மழையினால் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.
விவசாயிகள் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை, விளை நிலங்களை உழுது பண்படுத்தி நாற்று நட்டு, நெற்பயிர் விளைவதற்காக கூட்டுறவு வங்கியில் கடன் உதவி பெற்று, அனைத்து பணத்தையும் மூலதனமாகக் கொண்டு நெற்பயிரை பாதுகாத்து வளர்த்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும், தற்போது பெய்து வரும் தொடர் கன மழையினால் முற்றிலுமாக சேதமானது.
எனவே, சேதமடைந்த அனைத்து நெற்பயிர்களையும் விளைநிலங்களிலிருந்து அகற்றத் தேவையான பணத்தை அரசு வழங்க வேண்டும் அல்லது மீண்டும் விளைநிலத்தைப் பண்படுத்தி மறு விளைச்சல் செய்வதற்கு மீண்டும் மூலதன பணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:முதியோர் உதவித் தொகை வழங்குவதில் குளறுபடியா? தனியார் வங்கியின் முன் திரண்ட மூதாட்டிகள்! தர்ணா போராட்டம்!