திருவண்ணாமலை:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துக்களில் அனைத்து சாதியனரும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்காக, மேற்கண்ட அறிவிப்பின்படி சைவ அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பொருட்டு பயிற்சிப்பள்ளி அமைக்கப்பட உள்ளது.
அப்பயிற்சிப் பள்ளிகளில் பணியாற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் செய்பவர்களுக்கான தகுதி
விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலைப் பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். இந்து சமய இலக்கியங்களிலும் தமிழ்நாடு திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும், பல்கலைக் கழகம் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.