பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திகழ்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ காலத்தில் அதிகார நந்தி உள்ளிட்ட ஆறு நந்திகளுக்கும், இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பிரதோஷ நாயகனுக்கும் பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரங்களுக்குப் பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ”அரோகரா” அண்ணாமலையாருக்கு ”அரோகரா” என கோஷமிட்டு அண்ணாமலையாரை வணங்கி தரிசனம் செய்தனர்.