திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், சினிமா கொட்டகை தெருவைச் சேர்ந்த இளைஞர்களும் அம்பேத்கர் நகர் தெருவைச் சேர்ந்த இளைஞர்களும் மதுபோதையில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக அம்பேத்கர் நகர் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள், சினிமா கொட்டகை தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சுபாஷ், வினோத் உள்ளிட்ட இரண்டு பேரைக் கத்தியால் வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெட்டுப்பட்ட இருவரில் ஒருவரின் கை துண்டாகி உள்ளது, மற்றொருவரின் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தாக்குதலுக்குள்ளான இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயம் அடைந்த இளைஞர்களில் ஒருவர் இதனிடையே கத்தியால் தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி, கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட சினிமா கொட்டகை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, தாக்கிய நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மேலும் கலவரம் ஏதும் நிகழாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் சமரசம் பேசும் காவலர் கத்தியால் வெட்டிய அம்பேத்கர் நகர் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க, தடை உத்தரவை சரியாக நடைமுறைப்படுத்துவதில் காவல் துறையினர் சுணக்கம் காட்டியதே, இந்த மோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.