திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிறுதானிய உணவு அன்னதானம் திருவண்ணாமலை:சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி பௌர்ணமி கிரிவலம் வரும் சுமார் 2.5 லட்சம் பக்தர்களுக்கு சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை அன்னதானமாக வழங்கப்பட்டது.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு விழாக்கள் மற்றும் மாதந்தோறும் பெளர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும், வருகை புரிந்து அண்ணாமலை மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் மலையை சிவனாக கருதி கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
ஆவணி மாத பௌர்ணமி கிரிவல நாளான நேற்று (ஆகஸ்ட் 30) புதன்கிழமை காலை 10.56 மணிக்கு தொடங்கி இன்று (ஆகஸ்ட் 31) வியாழக்கிழமை காலை 7.06 மணி வரை இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டனர்.
குறிப்பாக நேற்று மாலை முதல் உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளவதற்காக திருவண்ணாமலையில் குவிந்தனர். ஐக்கிய நாடுகள் சபை பிரதமர் மோடியின் பரிந்துரைக்கிணங்க 2023 ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்திருந்தது.
அதன் படி இந்த ஆண்டு ஒவ்வொரு பௌர்ணமி கிரிவலம் நாளன்றும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில் பக்தர்களுக்கு சிறுதானிய உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறுதானிய உணவுகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவு வகைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாமை கிச்சடி, குதிரை வாலி பொங்கல், வரகு தயிர் சாதம், சாமை பிரியாணி, ராகி அல்வா, திணை கஞ்சி, வரகு சாம்பார் சாதம், வரகு புளியோதரை, குதிரைவாலி வெண்பொங்கல் உள்ளிட்ட சிறு தானிய வகைகளால் செய்யப்பட்ட உணவு வகைகளை வழங்கி வந்தனர். இந்த உணவு வகைகளைஉணவு பாதுகாப்பு துறையினர் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு 14 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சிறு தானிய வகைகளால் செய்யப்பட்ட உணவு வகைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் ஒவ்வொரு பௌர்ணமி கிரிவலம் அன்றும் இதேப் போல் சிறுதானிய உணவு இருக்கும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மல்லுக்கட்டிய மயில்கள் - வைரல் வீடியோ!