திருவண்ணாமலை:பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில், திருவண்ணாமலை மாவட்டத் தலைநகர் வளர்ச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஜூன். 28) நடந்தது.
ஆன்மிக நகர்
இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது, 'ஒரு காலத்தில் வடஆற்காடு மாவட்டத்தின் தலைநகராக சித்தூர், தென் ஆற்காடு தலைநகராக கடலூர் இருந்தது.
அப்போது தென்ஆற்காடு பகுதியில் திருவண்ணாமலை நகராட்சி இருந்தது. வடஆற்காடு மாவட்டத்தின் தலைநகராக வேலூர் உருவாக்கப்பட்டு, அதில் திருவண்ணாமலை நகராட்சி சேர்க்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 1989ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முகவரி அளித்து, பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தார்.
மாநிலத்தின் ஆன்மிக நகரான திருவண்ணாமலையின், வளர்ச்சிக்குத் தேவையான முக்கியப் பணிகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும்.
திருவண்ணாமலையில் 10 நாள்கள் நடைபெறும் கார்த்திகை தீபம் நிகழ்விற்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இருந்ததை விட , தற்போது அதிகளவிலான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மாவட்டத்தலைநகர் வளர்ச்சிக்கான ஆய்வுக்கூட்டத்தில் பல நல்ல கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் அதனை செயல்வடிவம் கொண்டு வருவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள்
- திருவண்ணாமலையில் புதியபேருந்து நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை
- நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சாலைகள் விரிவாக்கம்
- விளைபொருட்களை பதப்படுத்தி வைக்க குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும்
- திருவண்ணாமலையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை
இந்நிகழ்ச்சி முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, 'திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாட வீதிகள் கான்கிரீட் சாலையாக அமைப்பதற்கானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருப்பதியைப் போல் திருவண்ணாமலை திருக்கோயில்? இதற்கான, முதல் பணியாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரால் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
திருவண்ணாமலை 14 கி.மீ. கிரிவலப்பாதை மற்றும் நான்கு மாட வீதிகள் கான்கிரீட் சாலையாக அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்.
தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளதால், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு நிதி நிலைக்கு ஏற்றார்போல் அனைத்து கோரிக்கைகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்'என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் இவ்வளவு மின்சாரம் கிடைக்கக்காரணம் கருணாநிதியே...' - அமைச்சர் ஐ.பெரியசாமி