திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் விண்ணவனூர் கிராமநல சங்கம் சார்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் அளித்தல், அரசுப் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், கிராமநல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், நமது வாழ்க்கை ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்வது இயற்கையாகும். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த சீதோஷன நிலை இப்போது இல்லை, பூமி சூடாகியுள்ளது, சூரியனை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இதற்கு ஒரே தீர்வு பூமியை குளிர்விக்க வேண்டும் என்று கூறிய ஆட்சித் தலைவர், இதற்கு மரங்களை நட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பதனால் 40 சதவீகிதம் தண்ணீர் வீணாகுகிறது என்றார். மேலும், சுத்திகரிப்பு நிறுவனங்களால் தண்ணீரை உற்பத்தி செய்யமுடியாது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும், நாம் நமக்காக வாழாமல் கம்பெனிகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.