திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டுக்கான உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (ஜனவரி 6) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
வைச ஸ்தலங்களில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் வைகுந்த வாசல் திறப்பு, ஆருத்ரா தரிசனம், ஆனி மாத கொடியேற்றம், ஆனி திருமஞ்சனம், உத்ராயண மற்றும் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம், ஆடிப்புரம் மற்றும் கார்த்திகை தீபம் கொடியேற்றம் ஆகியவை மிக முக்கியமானதாகவும்.
12 மாதங்களில் சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தெற்கு நோக்கியும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கியம் நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகின்றது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்ராயண புண்ணிய காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் தட்சிணாயிண புண்ணிய காலமாகும்.