திருவண்ணாமலைக்கு வந்து 144 தடை உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் சாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியிருந்த முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் என 60 பேரை கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கிரிவல பாதையில் உள்ள முதியோர் இல்லத்தில் 60 பேருக்கும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்துள்ளார்.
இதன் பின்னர் அந்த 60 பேருக்கும் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை இங்கு தங்கியிருக்கும் 60 நபர்களுக்கும் அனைத்து விதமான வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படும், 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பின் இங்கு தங்கியிருப்பவர்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம் அல்லது அவர்களுடைய சொந்த ஊருக்கும் செல்லலாம் என்றார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இதுவரை 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் தொற்று உறுதியானவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.