திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்கிதரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்குள்ள புகழ்மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் கார்த்திகை தீபத்திருவிழா கோயிலின் பிரகாரத்தில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா பொது வெளியில் நடைபெற உள்ளது. வருகின்ற 27 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலையில் கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.