திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கனக ராமசாமி தெருவைச் சேர்ந்த தாமோதரனின் மனைவி தனலட்சுமி(56), பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் சென்னையில் தங்கி வேலை செய்யும் அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்தச்சூழ்நிலையில், தனலட்சுமியின் வீட்டின் கதவு இன்று காலை உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், தனலட்சுமி இதுகுறித்து தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்து தனலட்சுமி பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ. 10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல், சென்னை சென்றிருந்த வந்தவாசி டவுன் சைக்கிள் வரதராஜ் தெருவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பிச்சைமணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, வெள்ளி பொருள்கள் திருடுபோயுள்ளன.