திருவண்ணாமலை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திருவண்ணாமலை சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ''நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், திமுக தலைவர் கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார்'' என கூறினார்.
மேலும் அவருடைய துணிச்சலான இந்த நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தை கட்சி பாராட்டுவதாகவும், திமுக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்றார்.
பாஜக தலைமையிலான சனாதன சக்திகளை 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்கான வியூகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தனது பிறந்தநாள் உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார் எனவும், காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி கரையேறாது எனவும் தெரிவித்தார்.
மேலும் மம்தா பானர்ஜி தனித்துப்போட்டியிடுவோம் என்று அறிவித்தது இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும்; முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை நேரில் சந்தித்து தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளை தெரிவித்து, அனைத்து பாஜக எதிர்ப்புச் சக்திகளும் ஓரணியில் திரண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாக பேச வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.
திமுகவிற்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே விரிசலையும், முரண்பாட்டையும் உருவாக்க வேண்டும் என சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும், அதற்கு வாய்ப்பில்லை என்றும்; திமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமான கூட்டணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், 'பாமகவினர் அண்மையில் முதலமைச்சரை சந்தித்துப் பேசியதால் தான் அச்சப்படுவதாகவும் கலக்கமடைவதாகவும் கூறுகின்றனர். முதலமைச்சர் என்ற முறையில் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். குறிப்பாக பிரதமரை தான் சந்திப்பதால் பாஜகவுடன் இணைவதாக அர்த்தம் இல்லை. பாமகவிற்கு ஒரு கலாசாரம் உண்டு. கூட்டணியில் இருக்கும்போது அடுத்த தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ அந்த கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்பார்கள்.
இதற்குக்காரணம் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற இரண்டுத் தலைவர்களுக்கும் பாமக சார்பில் இந்த பக்கமும் பேச முடியும்; அந்தப் பக்கமும் பேச முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிப்பதாகவும், இதற்கு காரணம் பேரத்தை அதிகரிப்பதற்காக தான்' என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.