திருவண்ணாமலை: வந்தவாசியிலிருந்து 18 கிலோ மீட்டர் தென்மேற்கிலும், செஞ்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் வடகிழக்கிலும் அமைந்துள்ளது கீழ்நமண்டி கிராமம். இந்த கிராமப் பகுதியில், பெருங்கற்கால இடுகாடு அமைந்து உள்ளது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல் வட்டங்கள் உள்ளன. சில சேதமடைந்த கல் வட்டங்களினுள் ஈமப்பேழையின் எச்சங்கள் காணப்படுகின்றன.
இங்கே அமைந்துள்ள கல் வட்டங்கள் 3 முதல் 5 மீட்டர் வரை விட்டத்தை கொண்டதாக உள்ளன. கல் வட்டங்களைத் தவிர, இந்த தளத்தில் குத்துக்கல், கற்களில் கப் அடையாளங்கள் மற்றும் மெருகூட்டப் பயன்படுத்தப்பட்டப் பள்ளங்களும் காணப்படுகின்றன. இரும்பு காலத்தை சார்ந்த மண்பாண்டங்களான கருப்பு - சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் மேற்பரப்பு ஆய்வில் நல்ல எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஒடுகள் மற்றும் கருப்பு - சிவப்பு பானை ஒடுகள் இரண்டிலும் குறியீட்டு அடையாளங்கள் உள்ளன.