திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 18 மாத சம்பள பாக்கி தொகையை வழங்கக்கோரி தொடர்ந்து நேற்றிலிருந்து (ஆகஸ்டு 25) இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கூறியதாவது;
அகில இந்தியா முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 18 மாத சம்பளம் பாக்கி வழங்காததை கண்டித்து தொடர்ந்து நேற்றிலிருந்து (ஆகஸ்டு 25) இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பை கொடுத்து பணியை செய்த பின்னரும் ஊதியத்தை தராமல் இருப்பதால் பலதரப்பட்ட போராட்டங்களை செய்து வருகின்றோம். எங்கள் கோரிக்கைகளுக்கு தற்போது வரை அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.
அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இரண்டாம் நாளாக இன்று(ஆகஸ்ட் 26) உண்ணாவிரத போராட்டம் தொலைத்தொடர்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிமன்றம் சென்று எங்கள் சம்பள உரிமையை பெறுவதற்கு போராடும் நிலையில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே எங்கள் போராட்டம், கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நிர்வாகமும், அரசாங்கமும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது, இபிஎப், இஎஸ்ஐ பணப்பலன்களை முறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றனர்.