தமிழ்நாடு

tamil nadu

முகப்பருவை நீக்க ஊசியால் குத்திய ஆசிரியை? முகம் வீங்கி மாணவர் உயிரிழப்பு

By

Published : Jul 3, 2022, 7:59 PM IST

திருவண்ணாமலை பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவரின் முகப்பருவை நீக்க ஊசியால் ஆசிரியை குத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முகம் வீங்கி மாணவர் உயிரிழந்தார்.

முகம் வீங்கி மாணவன் உயிரிழப்பு
முகம் வீங்கி மாணவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை அரசவெளி பகுதியில் பழங்குடியினர் நல உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

ஜவ்வாது மலை பகுதி நம்மியம்பட்டு கிராமத்தினை சேர்ந்த சேவத்தான். இவரது மகன் சிவகாசி இந்த பள்ளியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மகாலஷ்மி, இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை உயர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு தன் சொந்த ஊதியத்திலும் மற்றும் நன்கொடையாக பெற்ற ஊதியத்திலும் உதவி செய்துள்ளார். இந்த செயல்பாடுகளால் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். மாணவ, மாணவிகளை சுத்தமாக பராமரித்தல், தலைமுடி, நகங்கள் வெட்டிவிடுதல், அவர்களுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுப்பது என பல முயற்சிகள் மேற்கொண்டவர் மகாலஷ்மி.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி இந்த பள்ளியில் தங்கி 10ஆம் வகுப்பு படிக்கும் நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவர் சிவகாசியின் முகம் வீங்கியுள்ளதாகவும், உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லக்கோரி இரவு 9 மணியளவில் மாணவனின் தந்தை சேவத்தானுக்கு ஆசிரியை மகாலஷ்மி தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த அவரது தந்தை சிவகாசியை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையித்தில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் பாகாயம் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவரின் உடல் நிலை மோசம் அடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை சேவத்தான் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சிவகாசியின் முகத்தில் உள்ள பருக்களை ஆசிரியர் மகாலஷ்மி ஊசியின் மூலம் நீக்கியதால் உயிரிழந்தாக தெரிவித்துள்ளார்.

மேலும் மலைவாழ் மாணவர்களுக்கு உளவியல் ஊக்கம் அளித்து அவர்களுடைய கல்வி அறிவை மேம்படுத்தும் ஆசிரியை முயற்சிக்கு ஏராளமான விருதுகள் குவிந்தன. குறிப்பாக தங்க மங்கை விருது, டாப் 10 மனிதர்கள் விருது உள்ளிட்டவை இவரது கல்வி பணிக்கான சான்றாக உள்ளது. இந்நிலையில் ஆசிரியை மகாலட்சுமியின் மீது ஏற்பட்டுள்ள இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்: சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details