திருவண்ணாமலையில் டாஸ்மாக் சூபர்வைசர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திருவண்ணாமலை:கீழ்பெண்ணாத்தூர் தாலுகா பெரிய கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). இவர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (டிச.27) வழக்கம்போல் வீட்டிலிருந்து டாஸ்மாக் கடைக்குச் சென்ற ராஜேந்திரன், வசூலான பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு சோமாஸ்பாடி வழியாக வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது சோமாஸ்பாடி பள்ளம் பகுதியின் ராஜேந்திரனின் வாகனம் மீது, அதே கிராமத்தைச் சேர்ந்த மன்னுசாமி என்பவரது 2வது மகன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஏற்பட்ட விபத்தில் ராஜேந்திரன் மயக்கம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னுசாமி, காயமடைந்த தனது மகனைத் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து தனது காரில் ராஜேந்திரனை ஏற்றிக்கொண்ட மன்னுசாமி, ராஜேந்திரனின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவி விமலாவை (37) அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு நேரடியாகச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது மன்னுசாமியின் காரிலேயே ராஜேந்திரனின் உடல் இருப்பதைக் கண்ட உறவினர்கள், ராஜேந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய உடலில் எந்த காயங்களும் இல்லாத நிலையில் அவர் உண்மையிலேயே விபத்தில் மரணம் அடைந்தாரா அல்லது ராஜேந்திரன் குடும்பத்துக்கும் மன்னுசாமிக்கும் இடையே இருக்கும் முன் விரோதம் காரணமாக வேறு ஏதாவது நடந்திருக்குமா என்று பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்பு, சாலை மறியலை கைவிட்டு ராஜேந்திரனின் உறவினர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பிரபல ரவுடி ரெட் தினேஷ் கொலை - 5 பேர் கைது; பின்னணி என்ன?