திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, "திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி, நினைத்தாலே முக்தி தரும் பூமியாகவும் விளங்குவது திருவண்ணாமலை. பல லட்சம் பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமியாக திருவண்ணாமலை விளங்குகின்றது. திருவண்ணாமலைக்கு இது என்னுடைய முதல் பயணம்.
மற்ற நாடுகளைப் போல் இந்தியா இல்லை. மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது. சாதுக்களாலும் ரிஷிகளாலும் ஆன்மீகத்தால் உருவாக்கப்பட்ட நாடு நமது பாரத நாடு.
மேலும், பாரம்பரிய இலக்கியத்துடன் தொடர்புடைய நாடு இந்தியா. இந்தியா என்பது சிவனால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் சிவனின் குழந்தைகள். இதுவே சனாதன மையமாகும்'' என்றும் உரையாற்றினார்.
சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கு உரியது அல்ல நமது சகோதரிகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அனைவரும் வாழ வேண்டும் என்பதே நமது சனாதன தர்மம் ஆகும்; இதில் நாம் நமது என்ற பாகுபாடு இல்லை என்றும் ஆளுநர் உரையாற்றினார்.
இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாடு என்றும்; இந்தியா 1947இல் பிறந்தது அல்ல.. நாம் அப்போது விடுதலை மட்டுமே அடைந்தோம் என்றும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலும் இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது. ரிஷிகளும், நாயன்மார்களும் தமிழகத்தில் அவதரித்து நாம் யார் என்று உண்மையை உலகிற்கு அறிவித்துள்ளார்கள். அதுவே தமிழகத்துக்கு மிகப்பெரிய பெருமை என்றும் உரையாற்றினார்.