திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் சாதுக்கள் என்ற போர்வையில் போலி சாமியார்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் சிதறிக்கிடப்பது குறித்தும் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாராயம் விற்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனங்கள், முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து செல்பவர்கள் என அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டு வருகிறது.
மேலும் கிரிவலப்பாதையில் தங்கி உள்ள சாதுக்களுக்குப் புதிதாக அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று (செப்.21) கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாகப் பார்வையிட்டார். அப்போது சாமியார்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டு குற்றப்பின்னணியில் இருக்கிறார்களா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.