திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. இதில் பக்தர்கள் முக்கியமாகத் தரிசிக்கும் கோயில்களில் ஒன்று திருநேர் அண்ணாமலையார். இக்கோயிலில் சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டு அன்று கருவறையில் அருள்பாலிக்கும் மூலவர் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
திருநேர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு! அதன்படி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளான இன்று அதிகாலையிலேயே திருநேர் அண்ணாமலையார் கோயில் திறக்கப்பட்டு மூலவருக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருநேர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வு நிகழ்வு இன்று காலை 7 மணி முதல் 7.05 மணி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் குறைந்த அளவு பக்தர்களே காணப்பட்டனர். மேலும் பக்தர்கள் யாரும் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு செக்வைத்த கோயில் நிர்வாகம்