ஊரடங்கு தடை உத்தரவால் விவசாய பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது, இதனால் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயமும், விவசாயிகளுக்கு வருமானமும் இன்றி தவித்தும் வந்தனர், விவசாயிகள், பொது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய, மாநில அரசுகள் வேளாண்மை பணிகளுக்கு இருந்த தடையை விலக்கின.
சித்திரை மாத நாற்று நடவு வேகமாக தொடக்கம் திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிளிப்பட்டு, வாணியந்தாங்கல், நொச்சிமலை, அரசம்பட்டு, சோமாசிபாடி உள்ளிட்ட கிராமங்களில் நெல் அறுவடை முடிவடைந்திருந்த நிலையில் தற்போது வேளாண்மைக்கு விலக்கு அளிக்கப்பட்ட காரணத்தால், சித்திரைப் பட்டம் நெல் நடவு பணிகளை சுறுசுறுப்பான முறையில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், இதனை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் வேளாண்மை பணிகளுக்கு தடை இல்லை என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விவசாய பணிகள் முழு வீச்சுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சித்திரைப்பட்டம் நெல் பயிர் பயிரிடுவதால் பூச்சிகள் தாக்கம் குறைந்து, மகசூலும் அதிகமாக கிடைக்கும் என்கின்ற காரணத்தால் விவசாயிகள் இந்த சித்திரை பட்டத்தை பயன்படுத்திக் கொள்ள ஏர் உழுது அதிக நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதில் ஆர்வமும், முனைப்பும் காட்டி பயிரிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரடிகளுக்கு ஊரடங்கு இல்லைபோலும்!