கடந்த ஆண்டு அரவைப் பருவத்திற்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கரைப்பூண்டியில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், நிலுவைத் தொகையானது மார்ச் 31ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளோ மார்ச் 31ஆம் தேதியிட்ட காசோலையினை வழங்குமாறு வலியுறுத்தினர்.
காசோலை வழங்க மறுப்புத் தெரிவித்தும்; பணமாகத்தான் வழங்குவோம் என்றும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரிடம் முறையிட விவசாயிகள், ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர், கரும்பு விவசாயிகள். அப்போது, கரைப்பூண்டி பாலம் அருகே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
'கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை மாவட்ட ஆட்சியர் பெற்றுத் தரவேண்டும்' தொடர்ந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் கரும்பு விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், 'கரும்பு அரவை செய்யும் ஆலைகள், 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்குப் பணம் வழங்கவேண்டும் என்ற அரசாணை உள்ளது. ஆனால், தனியார் சர்க்கரை ஆலை கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையைத் தராமல் இழுத்தடித்து வருகிறது. மூன்று இடத்தில் உள்ள இந்த ஆலை 90 கோடி ரூபாயை விவசாயிகளுக்குத் தராமல் பாக்கியாக வைத்துள்ளது.
கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் பேட்டி ஏற்கெனவே இதுபோல், மற்றொரு சர்க்கரை ஆலை 18 கோடி ரூபாய் பணத்தை விவசாயிகளுக்கு பாக்கி வைத்துவிட்டு, இயங்காமல் நிறுத்தப்பட்டது. இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாங்கள் நம்பிய இந்த சர்க்கரை ஆலையும் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் இருப்பதால், அந்த ஆலையை மாநில அரசு கைப்பற்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து, தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு சுமுகத் தீர்வு ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம். தீர்வு ஏற்படாத பட்சத்தில் நாங்கள் அடுத்த கட்டப் போராட்டத்தை மேற்கொள்வோம்" என்றார்.
இதையும் படிங்க:விவசாயிகள் விளைந்த நெல்லை வயலில் இரவு பகல் பாராமல் பாதுகாத்து வரும் அவலம்!