தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் நோய்ப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேடை நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தமிழர் தெருக்கூத்து கலைஞர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்கள் கரோனா பொதுமுடக்க பாதிப்பிலிருந்து தற்போதுதான் மீண்டுவரும் நிலையில், தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலு வரக்கூடிய சித்திரை மாதத்தில் திருவிழாக்களில் மேடை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் அதிக அளவில் நடைபெறும் என்று சுட்டிக்காட்டும் அவர்கள், இந்தச் சூழ்நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்களுடைய வாழ்வாதாரம் மேலும் நசுங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.
தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காக்க முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் கலைநிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் பேரிடர் நிவாரணமாக கலைஞர்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை கலைஞர்களும் மனு அளித்தனர்.